Thursday, September 29, 2011

சிறப்பு தரிசனம்

பேர்ல் கிங்

ஏக போகமாய் செல்வம் கொழிக்கும்
ஏழை ஆனாலும் எகத்தாளமாய்
எட்டி உதைக்கும்.
ஆண்டவன் முன் அனைவரும் சமமாம்.
ஆலயத்தில் மட்டும் ஏன் விதிவிலக்கு?
வரம் வேண்டுதல்கூட
கரம் தொட்டு தரும் காசில்தான்
உரமாகி வருவது உளம் கொல்லும் உண்மை.
காக்கும் கடவுளரும் காசுக்கு விலை போய்
காட்சி பொருளாகும் நிலை ஏன்?
துலாபாரமாய் நீதி கிட்டும் நம்பிக்கைதான் கோவில் என்றால்
வியாபாரமாய் அந்நீதியும் பணம் பார்க்கும் கொடுமை ஏன்?
உறுப்பு நோக நடந்தும் புரண்டும் - கடவுளின்
இருப்பு காண வரும் பக்தர்
கறுப்பு பணம் உண்டியல் சேர்க்கும் கயவர்க்கு பின்னே
விருப்பு இன்றி செல்வது ஏன்?

மாநகர தார் சாலைகளின் புலம்பல்...!

இளைய கவி

அடுக்கு அடுக்குகளாய்
நின்று போகும் அசுர வண்டிகளே!
அறிவு இருக்கிறதா
என் மேல் ஊர்ந்து போக
உன் மனம் வலிக்கலையா!
இருபது முப்பது வண்டிகளுக்கு
இடம் அளித்தேன்.
என் மீது செல்ல!
இரண்டாயிரம் மூவாயிரம்
வண்டிகளை அனுப்பி வைக்கிறார்கள்
என்னை கொல்ல!
வலி என்னும் அரக்கன்
என்னை சிறை பிடித்தான்.
வழக்கத்திற்கு மாறாக
வண்டிகளை என் மீது
அமரவைத்தான்!
உயிர் இல்லை
என்பது எனக்கு சாபம் இல்லையா?
அதிக வண்டிகளை என் மீது
செலுத்துவது உங்களுக்கு
பாவமாய் இல்லையா?
பத்தொன்பதாம் நூற்றாண்டு
பாதை போல்
இருந்தால் நல்லது!
பழையபடி என் மீது
வண்டிகளை செல்ல
குறைத்தால் வல்லது!
என்னைச் சுற்றி சுற்றி
நடக்கிறது சோகங்களாய்.
என் மீது செத்து செத்து
விழுகிறார்கள் பாவங்களாய்!
பழைய காலம் வருமோ
என்று பரிதவிக்கிறேன்!
வந்தால் உங்களுக்கும்
வசந்தம் பிறக்கும் என்று
வழி மேல் விழி வைக்கிறேன்.!

kavithai solai

பந்தயம்

ப. மதியழகன்

ஆசை பின்னிய வலையில்
சிக்கிக் கொண்டேன்
ஆரம்பமும் முடிவுமற்ற
வட்டத்திலிருந்து
வெளியேற முடியவில்லை
காலச்சக்கரம்
என்னைப் பொறுத்த அளவில்
சுழலவில்லை
எது உண்மை
எது பொய்யென்று
பிரித்தறிய முடியவில்லை
ஒவ்வொருவருடைய மறுபக்கமும்
பீதியூட்டுகிறது எனக்கு
ஒன்றுக்கு பின்னால்
இருந்தால்தான்
பூஜ்யத்திற்கு மதிப்பு என
தெரிந்து வைத்திருக்கிறேன்
அடர்ந்த இருளைக் கடக்க
எனக்கு ஒரு சுடர் தேவை
விடை கிடைக்காத
கேள்விகளின் எண்ணிக்கை
கூடிக்கொண்டே போகிறது
வாழ்க்கைப் பாதையில்
சரியான வழியில்தான்
சென்று கொண்டிருக்கிறேனா என்று
இப்போதுதான் எனக்கு
சந்தேகம் வருகிறது
பந்தயத்தில்
வேடிக்கைப் பார்ப்பவனை
யார்தான் விரும்புவார்கள்
இரைக்காக தூண்டிலில் சிக்கிய
மீனைப் போல் துள்ளுகிறேன்
முகம் தெரியாத ஒருவரின்
வயிற்றுப் பசிக்கு
இரையாகத்தான்
வந்து பிறந்தேனா
மாயாஜாலம்
ஏதாவது நிகழ்ந்தால்தான்
மாற்றம் வரும்
எனது வாழ்வில்
வாழ்க்கைப் புத்தகத்தில்
எனது பக்கம்
வெற்றிடமாக
இருந்து விட்டுப் போகட்டும்
இயற்கையின் பேரதிசயத்தை
கண்கள் விரிய பார்த்த
பால்யத்தை தொலைத்துவிட்டு
அலைகிறேன்
கனவுக்கும் நனவுக்கும்
இடையேயான இடைவெளியை
நினைத்து நினைத்து
அழுகிறேன்.

kavithai solai

நீ பறித்த ஒரு பூ!

ஜே. செந்தில் குமார்

நீ என் இதயத்தை
பூ என்று சொன்னாய்!
புரியவில்லை அன்று!
புரிந்துகொண்டேன் இன்று!
நீ என் இதயத்தை
பறித்து சென்ற போது!